சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற கிராமப் பூசாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பூசாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளின்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து கிராமப் பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியில் இருக்கும் பூசாரி உயிரிழந்தால் அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவித் தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 75,000-லிருந்து ரூ. 1,25,000-ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
இயற்கை எய்திய பூசாரிகளின் குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ. 10,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த 11 புதிய அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் கிராமப்புறக் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான கிராமப் பூசாரிகள் கலந்து கொண்டனர்.
