மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்குச் சாதகமாக அமைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அசாம் மாநில மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் டெல்லி உரை தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேற்கு வங்க தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி என்பது பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல; அது மக்களின் மாற்றத்திற்கான ஏக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான விருப்பம் மட்டுமே” எனத் தெளிவுபடுத்தினார்.

பாஜகவின் இந்தத் தொடர் வெற்றிகள் மூலம் 2047-க்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை எட்டும் கனவு இனி வெகு தொலைவில் இல்லை எனவும், இது நாட்டின் எதிர்காலத்திற்கான ஒளிமயமான தொடக்கம் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

கங்கோத்ரி முதல் கங்கசாகர் வரை தாமரை மலர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி மக்களின் உழைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி எனப் போற்றினார்.