கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கடந்த 27-ந்தேதி ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியானது நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது. இச்சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வரும் 17-ந்தேதி கரூரின் வேலுசாமிபுரம் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அவர் நேரில் சந்திக்கவுள்ளார். மேலும், நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியையும் விஜய் நேரில் வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, விஜயின் வருகை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து த.வெ.க. நிர்வாகிகள், கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர். காவல்துறையினரின் அனுமதி கிடைத்ததும், விஜயின் கரூர் விஜயம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
