தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் ஜவுளி வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தற்காலிக பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க தீயணைப்புத் துறை கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதற்காக, தீயணைப்புத் துறை இயக்குநரும் டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அந்த சுற்றறிக்கையில், வெடிப்பொருள் சட்டத்தின்படி கடை அமைக்கும் இடம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னரே தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்காலிக பட்டாசுக் கடைகள் விற்பனை உரிமம் பெற விரும்புவோர் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை ஆகியவற்றிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.

இந்த ஆண்டிற்கான தீபாவளியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 9,549 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு நடைபெற்று வருவதால், ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் 681 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் சில விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், அனுமதி பெறும் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9,177 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றில் சுமார் 7,000 விண்ணப்பங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.