சேலம் மாநகரப் பகுதியில் 13 வயது பள்ளிச் சிறுமிக்குத் திட்டமிட்டு மதுபானம் கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் 14 பேரைப் பிடித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்  கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பள்ளிச் சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தோழிகளுடன் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பூங்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு சில நபர்கள் திட்டமிட்டு அச்சிறுமிக்கு மதுபானம் கொடுத்துப் பழக்கியுள்ளனர்.

அந்தத் தீய பழக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வக்கிர புத்தி கொண்ட கும்பல், சிறுமியைத் தொடர்ந்து மிரட்டி ஓராண்டுக்கும் மேலாகப் பலமுறை கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்கள் செல்லச் செல்லச் சிறுமியின் நடத்தையில் திடீர் மாற்றங்களும், உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதைக் கவனித்த அவர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உடனடியாக உஷாராகிச் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளார். தலைமை ஆசிரியர் கொடுத்த இந்தத் தகவலால் நிலைகுலைந்துபோன பெற்றோர், உடனே  காவல் நிலையத்திற்குச் சென்று கதறிக்கொண்டே புகார் அளித்தனர்.

புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாக போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து களத்தில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இக்குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுமிக்கு மது விநியோகம் செய்தது மற்றும் இந்தச் செயலின் பின்னணியில் உள்ள முழு வலையமைப்பையும் கண்டறியச் சேலம் மாநகரக் காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 14 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிச் சிறுமிக்கு எதிரான இந்த நயவஞ்சகச் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.