சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் காணும் பொங்கல் தினத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வந்த சிறுவனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சூளைமேடு ரோந்து வாகன போலீஸ்காரர் சுரேஷ் நள்ளிரவு 12:30 மணிக்கு அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனியாக நடந்த சென்ற சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன் ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த குமரன் நகர் போலீசார் சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவனை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரர் சுரேஷை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.