உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மண்ட்வ்வாலா பாஜக நிர்வாகியும், அம்மாவட்ட இளைஞர்அணி தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ரோகித் நகி. இவர் கடந்த மே 2ஆம் தேதி இரவு காரில் சவுத் நகரில் உள்ள சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பைக்கில் வந்த 2 நபர்கள் காரை இடைமறித்தனர். பின்னர் பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் துப்பாக்கியால் காரில் இருந்த ரோகித்தை சரமாரியாக சுட்டார். அதில் சம்பவ இடத்திலேயே ரோகித் மயங்கி சரிந்தார். இதனை கண்ட அவரது நண்பர் உடனடியாக அந்த காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு ரோகித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோகித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ரோகித்தை துப்பாக்கியால் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர்கள் குறித்த விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசார் தியாகி என்ற நபர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் பாஜக நிர்வாகி பெண் விவகாரத்தால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
