
தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு போன்றவற்றுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அவரைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டம் தொடர் போராட்டமாக மாறும். இது டெல்லியையும் முற்றுகையிடும்.
ஆளுநர் ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து 50 பேரை பலி வாங்கியுள்ளார். பணம் பெற்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர் என பேசியவர். நீங்கள் யாரிடம் பணம் பெற்று இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். இப்படி தொடர்ந்து பேசினால் நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது என்று கூறினார். மேலும் டெல்லியிலும் ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என்றும் கூறினார்.