ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, நான்கு நாட்களுக்குள் அதே பகுதியில் நடக்கும் இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும். கடந்த ஜூலை 30ம் தேதி இப்பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலநடுக்கத்துக்குப் பிறகு, பசிபிக் கடலோர நாடுகளான ஜப்பான், சிலி, பிரெஞ்சு பாலினேசியா உள்ளிட்ட இடங்களில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா, ஜப்பான் எல்லைப் பகுதியான குரில் தீவுகள் மக்கள் பாதுகாப்பாக உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுனாமி அலைகள் குறைந்த அளவிலே வரலாம் என்றாலும், எந்த ஆபத்தையும் தவிர்க்க வேண்டும் என ரஷ்ய அவசர சேவைகள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல், கடந்த 600 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த க்ராஷென்னினிகோவ் எனும் எரிமலை, இந்த நிலநடுக்கத்துடன் இணைந்து தற்போது வெடித்து செயலில் நுழைந்துள்ளது. இதன் தீவிர அச்சத்தால் உள்ளூர் மக்கள் விலகிச் செல்வதைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து கிளைச்செவ்ஸ்காய் எரிமலையும் மீண்டும்  செயல்பட்டு லாவா, புகையை வெளியேற்றி வருகிறது. இதையடுத்து நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்கிடையிலான தொடர்புகள் குறித்து புவியியலாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையிலும் சுனாமி அபாயங்கள் முழுமையாக நீங்கவில்லை. கடற்கரை மற்றும் தீவுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசரத்திலேயே பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். வியோன்நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 1952ம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 9-ஆக பதிவான பிரமாண்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, கம்சட்கா பகுதியில் பதிவாகிய மிகவும் வலுவான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.