அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள், கோவிலுக்குச் செல்ல வீடைவிட்டு புறப்பட்டதிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்டனர்.

ஆனால், அவர்கள் மேற்குவர்ஜீனியா மாநிலத்தின் மார்ஷல் கவுண்டி பகுதியில் காருடன் பிக் வீலிங் க்ரீக் சாலையில் உள்ள ஒரு செங்குத்தான கரையில் வீழ்ந்து விபத்தில் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சோகம் மிகுந்த தகவலை மார்ஷல் கவுண்டி ஷெரிப் மைக் டௌஹெர்டி சனிக்கிழமை வெளியிட்டார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் டாக்டர் கிஷோர் திவான், அவரது மனைவி ஆஷா திவான், ஷைலேஷ் திவான் மற்றும் அவரது மனைவி கீதா திவான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த  வெளிர் பச்சை நிற டொயோட்டா கேம்ரி காரை ஆகஸ்ட் 2-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் பிக் வீலிங் க்ரீக் சாலையில் கண்டுபிடித்தனர்.

அவர்கள் சென்ற வாகனம் ஒரு ஆன்மீக தளம்  “பிரபுபாதரின் தங்க அரண்மனை”க்கு செல்லும் வழியில் இருந்தது. ஆனால் அந்த இடத்தில் அவர்கள் பதிவு செய்திருந்தபோதும், செல்லவே  இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால், அவர்களின் செல்போன் சிக்னல்கள் மற்றும் க்ரெடிட் கார்டு செயல்பாடுகள் பென்சில்வேனியாவில் உள்ள உணவகத்தில் கடைசியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களின் காணாமற்போன விவரங்களை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்தவுடன் தேடல் தீவிரப்படுத்தப்பட்டது.

திவான் குடும்பத்தைத் தேடும் முயற்சியில் பல ஏஜென்சிகள் இணைந்து செயல்பட்டன. இறுதியாக அவர்கள் வாகனம்  பீக் வீலிங் க்ரீக் சாலையில் ஓரமாக இருந்து மீட்கப்பட்டபோது, அனைவரும் உயிரிழந்த நிலையில் இருந்தது. இச்சம்பவம் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.