இந்தியா – வங்காளதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் நபர்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திரிபுராவில் ஏற்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கொவாய் மாவட்டத்தில் உள்ள பிட்யாபல் கிராமம் வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்குள் நேற்று முன்தினம் வங்காளதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கும்பல் இந்தியா எல்லைக்குள் நுழைந்து, பிட்யாபல் கிராமத்தில் இருந்த மாடுகளை கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். இதை கவனித்த கிராம மக்கள் உடனே அந்த கும்பலை தடுக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட தகராறில் வங்காளதேச கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் கிராமத்தினரை தாக்கியதில், ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் கோபமடைந்த கிராமத்தினர், வங்காளதேச கும்பலை உருட்டுக் கட்டை உள்ளிட்ட மர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் கும்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் திரிபுரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோத நுழைவுகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.