பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரிலுள்ள ஐ.வி.ஒய் எனும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர். உடனே அவரை ICUல் சேர்க்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு பகதூர் சிங் இறந்துவிட்டார் என மருத்துவமனை கூறியுள்ளது. மேலும் உரிய தொகையை கட்டிவிட்டு இறந்த உடலை எடுத்து செல்லும்படி அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் பகதூர் உடல் அருகில் சென்றபோது உடலில் லேசான இயக்கம் காணப்பட்டுள்ளது.

உடனே அவரது குடும்பத்தினர் பகதூர் சிங்கை தூக்கி கொண்டு பி.ஜி.ஐ. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திக்கு சென்று உள்ளனர். அப்போது பகதூர் சிங்கை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், சில மணிநேரத்திற்கு பின் அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. அதனைத்தொடர்ந்து பகதூர் சிங் குடும்பத்தினர் அந்த மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.