தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5 வகுப்பு வரை) தாள் 1-லும், பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை) தாள் 2-லும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, முதல் தாளுக்கான தேர்வு வரும் நவம்பர் 15ஆம் தேதியும், இரண்டாம் தாளுக்கான தேர்வு நவம்பர் 16ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஓஎம்ஆர் முறையில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் trb.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்களது பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து, தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்களுக்கு உதவும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை ஒரு சிறப்பு முகாம் செயல்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கான விதிமுறைகளைப் பின்பற்றி, குறித்த நேரத்தில் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
