ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியான முயற்சிகளே சரியான வழி என்றும், பேச்சுவார்த்தைக்கான சூழலை பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட நாடுகள் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாஸ்கோவின் மேற்கே உள்ள நோவாகோரோட் பகுதியில் அமைந்துள்ள அதிபரின் வீட்டை இலக்கு வைத்து உக்ரைன் தொண்ணூற்றொன்று ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இச்சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும், இது போன்ற செயல்கள் அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், இது ரஷ்யாவின் புனைவுக்கதை என்றும் போர் நிறுத்த முயற்சிகளைக் குலைக்கவே இத்தகைய பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உக்ரைனின் இந்தச் செயல் அரசு பயங்கரவாதம் என்று விமர்சித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இதற்குப் பதிலடியாக உக்ரைன் மீது எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அதற்கான இலக்குகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ரஷ்ய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
