விற்பனை செய்யப்படும் அனைத்துப் பானங்களையும் ‘டீ’ (Tea) அல்லது ‘தேநீர்’ என்ற பெயரில் அழைக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேயிலை இல்லாத பானங்களுக்கு ‘டீ’ என்ற பெயரைப் பயன்படுத்துவது நுகர்வோரை ஏமாற்றும் செயல் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

எதற்கு ‘டீ’ என்று பெயரிடலாம்?

FSSAI வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, உண்மையான தேயிலை  இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களுக்கு மட்டுமே ‘தேநீர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்.

கிரீன் டீ (Green Tea) மற்றும் இன்ஸ்டன்ட் டீ (Instant Tea) போன்ற தயாரிப்புகளில் தேயிலை கலந்திருப்பதால், அவற்றை ‘டீ’ என்று குறிப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட பெயர்கள்:

சில நிறுவனங்கள் தேயிலையே இல்லாத பானங்களை ‘டீ’ என்ற பெயரில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக:

ஹெர்பல் டீ (Herbal Tea)
ரூயிபோஸ் டீ (Rooibos Tea)

போன்ற பானங்களில் தேயிலை இலைகள் சேர்க்கப்படுவதில்லை. எனவே, இனி இவற்றை ‘டீ’ அல்லது ‘தேநீர்’ என்ற அடைமொழியுடன் விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேயிலை இல்லாத ஒரு பொருளை ‘டீ’ என்று அழைப்பது வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவலை வழங்கும் செயலாகும். எனவே, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், தாங்கள் விற்கும் பொருளில் தேயிலை இல்லை என்றால், அதன் லேபிளில் (Label) ‘டீ’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும்” என்று FSSAI அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்த புதிய விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி தவறான பெயரில் பானங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.