ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், சாலையோரம் அமர்ந்து அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனிய இளைஞர் ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர் தனது ஏடிவி (ATV) வாகனத்தை ஏற்றித் தாக்கிய சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அந்த நபர் இஸ்ரேல் ராணுவத்தின் ‘ரிசர்வ்’ (Reservist) வீரர் என்பது உறுதி செய்யப்பட்டது. தொழுகையில் இருந்தவர் மீது வாகனத்தை மோதியதுடன், கையில் துப்பாக்கியுடன் அந்த இளைஞரை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்த அந்த வீரரின் செயல் கடும் கண்டனத்திற்குள்ளானது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட வீரரின் ராணுவச் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவரிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அந்த வீரர் கைது செய்யப்பட்டு, தற்போது 5 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் மேற்கு கரையில் இதுபோன்ற 750-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) கவலை தெரிவித்துள்ளது.