மகாராஷ்டிரா மாநிலத்தின் வாஷிம் மாவட்டம் பல்ஸாகெட் பகுதியைச் சேர்ந்த சிவானி வைபவ் கவஹனே என்ற 26 வயது கர்ப்பிணி, ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பிரசவ வலியுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதித்தபின், “அனைத்து அறிக்கைகளும் சாதாரணமாக உள்ளது, காலை 10 மணிக்குள் பிரசவம் நடைபெறும்” என உறுதியளித்தனர். ஆனால் அதற்குப் பிறகு நேராக 14 மணி நேரம் எந்த மருத்துவரும் வராததுடன், பராமரிப்பு ஊழியர்களும் வரவில்லை என குடும்பத்தினர் புகார் கூறினர்.

அந்த நேரத்தில், சிவானிக்கு கடும் வலி ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் மாறி மாறி மருத்துவர்களை அழைத்தும், அழைப்பு ஏற்கப்படவில்லையென கூறுகின்றனர். மாலை 5 மணி வரை யாரும் வராத நிலையில், நிலைமை மோசமாகிய பிறகு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், அப்போது ஏற்கனவே சிக்கலான நிலை உருவாகியிருந்தது. மாலை 5.30 மணிக்கு சிவானிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு இதயத் துடிப்பு இல்லை என்று கூறி, உடனடியாக குழந்தை இறந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர், மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை உயிரிழந்தது எனக் கூறி மருத்துவமனை நிர்வாகத்தின்மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பிரசவத்தின் போது சிவானிக்கு மனிதாபிமானமின்றி நடந்துகொண்டதாகவும், “முகத்தில் அறைந்தும், வயிற்றை அழுத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டது; அனுபவமில்லாத ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்” எனவும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது “பொறுப்பற்ற கொலை” குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவானியின் மாமியார் லதா கவஹனே, “மருத்துவர்களின் அலட்சியமே இந்த குழந்தையின் மரணத்திற்கு காரணம். மருத்துவமனையில் தன் மருமகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. நாங்கள் அதிகாலை முதல் மாலை வரை கூறி கொண்டிருந்தோம், ஆனால் யாரும் கவனிக்கவில்லை,” என்று சோகம் தெரிவிக்கிறார். இதையடுத்து மாவட்ட மருத்துவத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்வை தொடர்ந்து பொதுமக்கள் மனமுடைந்த நிலையில், மருத்துவமனையின் செயல்பாடு குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.