கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நாட்டின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனமானது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது, தொழில் அதிபர் அதானியின் சொத்துகளின் வானளாவிய அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் எனும் பொருளில் குற்றம்சாட்டினார். இதற்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவை கூடியதும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேலவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதானி விவகாரம் சுப்ரீம்கோர்ட்டின் விசாரணையில் இருக்கிறது. இதனால் அதுகுறித்து விமர்சிப்பது முறையல்ல.

எனினும் ஹிண்டன்பர்க்- அதானி விவகாரத்தில் பா.ஜ.க பயப்படவோ, மறைப்பதற்கோ எதுவும் இல்லை என கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை தேவை என்ற எங்களது கோரிக்கையிலிருந்து மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனில் பிறகு ஏன் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்? நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நாங்கள் எழுப்பிய கேள்விகளை அவர்கள் நீக்கியிருக்கின்றனர். நாங்கள் அமைதியாக இருக்குமாறு மிரட்டப்பட்டு வருகிறோம் என அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்