தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்திற்கு சென்று அங்கிருந்து பணிக்கு செல்வார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று வேல்துரையின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் வேல்துரையின் மீது மோதிய காரின் ஓட்டுனர் ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது விபத்து இல்லை…திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. அதாவது வேல்துரை வசித்து வரும் வீட்டின் உரிமையாளருக்கும், அவருடைய மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை வேல் துரை கண்டித்ததால் அவருடைய மனைவி, உரிமையாளரான சுதாகர் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக சுதாகர் தனது நண்பர் ஆறுமுகம் உதவியுடன் வேல்துரையை காரை ஏற்றி கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பேச்சியம்மாள், சுதாகர் ஆகியோரை கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.