சாதி பெருமிதம் என்பது தேசத்திற்கும், அரசியலமைப்பிற்கும் எதிரானது எனக் கூறி, அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் சாதி அடையாளங்களை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, உத்தரபிரதேச அரசு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. சாதியை குறிக்கும் பெயர்கள், அடையாளங்கள் மற்றும் கோஷங்களை பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் சாதி பெருமை பறைசாற்றும் பலகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் சாதி பெயர்கள் அல்லது கோஷங்களை ஒட்டினால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில், காவல்துறை ஆவணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் நோட்டிஸ் போர்டுகளில் சாதி பெயர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நபரின் தந்தை பெயரை அடையாளமாக பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சாதி வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் மட்டும் இந்த விதி பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள், சமூகத்தில் சாதி பாகுபாடுகளை குறைக்கவும், ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதி அடையாளங்களை மறைத்து, மனிதர்களை ஒரே நிலையில் காண வேண்டும் என்ற இந்த முயற்சி, பலரால் வரவேற்கப்பட்டாலும், இதை முழுமையாக அமல்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
