மும்பையின் மலாட் வெஸ்ட் பகுதியில், 36 வயது நபரான கல்பேஷ் பானுஷாலி என்ற இளைஞர், வியாழக்கிழமை அதிகாலை கொடூரமாக தாக்கப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ருபா பார் மற்றும் உணவகத்தில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம், 5 பேர் கொண்ட கும்பலால் கல்பேஷ் மீது கண்ணாடி பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட கொடூரத்தில் முடிவடைந்தது.
இந்த கொடூர தாக்குதலில் கல்பேஷின் தலை, முதுகு, வயிறு மற்றும் கழுத்தில் 12 பீர் பாட்டில்கள் உடைக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஹேமந்த் படேல் (20) கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் முக்கிய குற்றவாளியான சஞ்சய் மக்வானா உட்பட மூவர் தலைமறைவாக உள்ளனர்.
கல்பேஷ், உணவு பார்சல் வாங்க குருக்ருபா உணவகத்திற்கு சென்றபோது, உணவகம் மூடப்பட உள்ளதாக மேலாளர் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கல்பேஷ் மேலாளரை திட்டியதாகவும், அருகில் இருந்த மக்வானா, கல்பேஷ் தன்னை திட்டுவதாக நினைத்து வாக்குவாதத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் வன்முறையாக மாற, மக்வானா, கல்பேஷை கொலை செய்யப்போவதாக மிரட்டிவிட்டு, தனது நண்பர்களுடன் திரும்பி வந்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். கல்பேஷ் மலாட் வெஸ்ட் பகுதியில் கணபதி சிலைகள் செய்யும் பட்டறையை நடத்தி வந்தவர், மக்வானா ஒரு பேன்ஜோ குழுவில் உறுப்பினராக இருப்பவர். தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலைமறைவான மக்வானா மற்றும் மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
