உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்தின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்புடனான நட்பை முறித்துக்கொண்டார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் “உங்கள் சுதந்திரத்தை திருப்பித் தர ‘அமெரிக்கக் கட்சி’ உருவாக்கப்பட்டது” என பரபரப்பான அறிக்கை வெளியிட்டார்.
“ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல” என கடுமையாக விமர்சித்த அவர், வரும் 2026 இடைக்காலத் தேர்தலில் தனது ‘அமெரிக்கக் கட்சி’ போட்டியிடும் என அறிவித்தார்.
2024 தேர்தலில் டிரம்ப் உள்ளிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு 300 மில்லியன் டாலர்கள் செலவிட்ட மஸ்க், தற்போது வணிகத்தில் முழு கவனம் செலுத்துவதாகவும், அரசியல் பேச்சுகளில் அமைதி காப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
2028 ஜனாதிபதி தேர்தலில் ஜே.டி. வான்ஸை வேட்பாளராக ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்புடனான மோதல் போக்கு மற்றும் புதிய கட்சி தொடங்கிய பின்னரும், குடியரசு கட்சியுடன் மஸ்க் மறைமுக தொடர்பு வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அமெரிக்கக் கட்சி’யின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மஸ்கின் அரசியல் நகர்வுகள் குறித்து ஆவலுடன் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.
