இந்தியக் கடற்படையின் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் 2026 சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. கடந்த மார்ச் நான்காம் தேதி இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் ஈரானியக் கப்பலில் இருந்த எண்பத்தி ஏழு பேர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் விருந்தினராக வந்த தங்கள் கப்பலை எவ்வித முன்னறிவிப்புமின்றித் தாக்கிய அமெரிக்கா விரைவில் இதற்காக வருத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ப் பதற்றத்தை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் விரிவாக்கியுள்ளது.
இதற்கிடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஈரானின் மற்றொரு போர்க்கப்பலான ஐரிஸ் லாவன் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது தற்போதைய சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்வதேசக் கடற்படை ஆய்வில் பங்கேற்க வந்த இந்தக் கப்பலில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய கொச்சித் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரி பிப்ரவரி 28ம் தேதி ஈரான் விண்ணப்பித்திருந்தது.
இந்தியாவின் மனிதாபிமான அடிப்படையிலான உடனடி அனுமதியைத் தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி முதல் இந்தக் கப்பல் கொச்சியில் தங்கியுள்ளது. தற்போது இந்தக் கப்பலில் உள்ள நூற்று எண்பத்தி மூன்று பேரும் இந்தியக் கடற்படையின் பாதுகாப்பில் கொச்சியில் உள்ளனர். ஈரானின் ஒரு கப்பல் தாக்கப்பட்ட நிலையில் மற்றொரு கப்பலுக்கு இந்தியா புகலிடம் அளித்துள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
