ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் கடினமாக உழைத்த ஒரு ஊழியருக்கு நடந்த அநீதி குறித்த பதிவு தற்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த ஊழியர் அலுவலகத்திற்கு அதிகாலையிலேயே வந்துவிடுவார், எல்லாரும் சென்ற பிறகு கடைசியாகத்தான் கிளம்புவார்.
நிறுவனத்தின் சிஸ்டம் குறித்து அவரை விட வேறு யாருக்கும் தெரியாது. நள்ளிரவு 2 மணிக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட நிறுவன நிர்வாகிகள் இவரைத்தான் அழைப்பார்கள்.
ஆனால், இவ்வளவு விசுவாசமாக இருந்தும் அவருக்கு 6 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் 26 வயதே ஆன ஒரு எம்பிஏ பட்டதாரி அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
வந்த சில மாதங்களிலேயே அவர் உயரதிகாரிகளுடன் நெருக்கமாகி, இதுவரை அந்த பழைய ஊழியருக்குக் கிடைக்காத முக்கியக் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.
தனக்குக் கீழ் வந்த அந்த இளைஞருக்குத் தானாக முன்வந்து சகல வித்தைகளையும் அந்த ஊழியர் கற்றுக்கொடுத்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் இவ்வளவு காலம் ஒரு நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்தேனே தவிர, என் லட்சியத்திற்கு விசுவாசமாக இல்லை” என்று கூறிவிட்டு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் விலகிய பிறகுதான் அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், “அவர் சென்றது நிறுவனத்திற்குப் பெரிய இழப்பு” என மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
விசுவாசத்தை விட திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
