உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில், தனது மைத்துனரின் மருத்துவப் பட்டத்தைப் பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மருத்துவக் கல்லூரியில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி வந்த அபிநவ் சிங் என்ற நபர் வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரைப் பிடிப்பதற்காக நான்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விசாரணையில், இவர் உண்மையில் ஒரு பொறியாளர் என்பது தெரியவந்துள்ளது. இவரது சகோதரி சோனாலி சிங் அளித்த புகாரின் பேரிலேயே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. தனது கணவர் டாக்டர் ராஜீவ் குப்தாவின் பட்டத்தைப் பயன்படுத்தி அபிநவ் சிங் வேலை செய்து வருவதாக அவர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார். அக்குழுவின் விசாரணையில், அபிநவ் சிங் தனது மைத்துனரின் பெயரில் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துணைத் தலைமை மருத்துவ அலுவலரின் புகாரின் பேரில், அபிநவ் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் குரை என்ற இடத்திலிருந்து கைது செய்யப்பட்ட அபிநவ் சிங், போலீஸ் விசாரணையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் சுங்கத் துறையில் பணியாற்றியபோது, 1999ஆம் ஆண்டில் ஊழல் வழக்கில் சிக்கித் தலைமறைவாக இருந்ததாகவும், அப்போதுதான் தனது மைத்துனர் டாக்டர் ராஜீவ் குப்தாவின் பட்டத்தைப் பயன்படுத்தி மதுராவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
2019இல் சிபிஐ இவரை கைது செய்ததாகவும், இவருக்குப் பதினாறு மாதச் சிறைத் தண்டனையும் எட்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 2020 ஜூலையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இவர் மருத்துவப் புத்தகங்களைப் படித்து, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் (NHM) மாநில மருத்துவக் கல்லூரியில் இருதயவியல் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்திற்கான நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.
அதில் தனது மைத்துனர் டாக்டர் ராஜீவ் குப்தாவின் ஆவணங்கள் மற்றும் தனது புகைப்படம், அடையாள அட்டைகளைப் பயன்படுத்தித் தேர்வானதாகத் தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து அவர் ‘டாக்டர் ராஜீவ் குப்தா எம்.டி. மருத்துவம், இருதய நோய் நிபுணர்’ என்று போலியான பலகையை வைத்துக்கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் தனது மைத்துனரின் பெயரில் துப்பாக்கியும் வாங்கியுள்ளதும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
