கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராக அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சையான் மற்றும் மனுதாரருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்திருந்தது.

இந்த நிலையில் அந்த மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது வீட்டிலேயே சாட்சிகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக சாமுவேல் மேத்யூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள்,

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும் கூறினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல் வழங்க அவரது தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினுடைய விசாரணையை ஜனவரி 5ஆம் தேதி ஒத்தி வைத்திருக்கின்றனர்.