ஆப்கானிஸ்தான் நாட்டில், பெண்கள் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தலீபான்கள் தடை விதித்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 2021 ஆம் வருடத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கல்வி பயில தடை விதித்ததோடு, அவர்கள் கேளிக்கை பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லவும் தடை அறிவித்தார்கள்.
இது மட்டுமல்லாமல், ஆண்களின்றி தனியாக பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதித்தனர். பணியிடங்களுக்கும் செல்ல தடை விதித்ததால், சர்வதேச அளவில் கண்டனங்களும் எழுந்தது. எனினும் அதனை கண்டு கொள்ளாத தலிபான்கள் அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள தடை அறிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி பொது விவகாரங்கள் மற்றும் தலிபான்களின் புகார்களை கேட்கக்கூடிய இயக்குனரகம் தெரிவித்திருப்பதாவது, இனிமேல் ஆண் மருத்துவர்களை காணச் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண்கள் அவர்களின் நோயை குணப்படுத்திக் கொள்ள பெண் மருத்துவரிடம் மட்டும் தான் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் இதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.