புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, நடிகர் விஜயின் அரசியல் வருகையை திட்டவட்டமாக விமர்சித்தார். “விஜய் பரப்புரை மேற்கொள்கிறார் என்பதால்தான் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை,” எனத் தெரிவித்த அவர், விஜயின் கூட்டங்களில் ஏற்பட்ட பொதுசொத்து சேதங்களை சுட்டிக்காட்டினார்.
தவெக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும் என்றும் அவர் கூறினார். ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பாதையாக இருந்தாலும் அந்த வழியாக ஆம்புலன்ஸ் செல்லும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது.
மேலும், 2011ம் ஆண்டு நடிகர் வடிவேலு திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். “அப்போது கூட மிகப்பெரிய கூட்டம் தான் ஏற்பட்டது. ஆனால் அந்த கூட்டம் வாக்காக மாறினதா? இல்லை. அதேபோல் இப்போதும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்கிறார்,” எனக் கூறினார்.
