தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்த ஸ்ரேயா குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கன்னடத்தில் உருவான கப்ஜா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை ஸ்ரேயா பேசினார்.

அவர் பேசியதாவது, கப்ஜா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. அதேபோன்று ரஜினியுடன் சேர்ந்து சிவாஜி படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சங்கருக்கும் நன்றி. அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் போது நான் சினிமா பற்றி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார். தன்னுடைய வெற்றியை எப்போதும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக் கூடாது என்பதை அவரை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரேயா கூறினார்.