ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் நடிகர், கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். தனியார் வானொலியில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்த மணிகண்டன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இவர் பீட்சா 2 படத்திற்கு கதை ஆசிரியராக அறிமுகமானார்.

மணிகண்டன் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியதற்காக மணிகண்டனுக்கு விருது கொடுக்கப்பட்டது. காலா, சில்லு கருப்பட்டி, பாவ கதைகள், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் மணிகண்டனின் நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் வெளியான லவ்வர் படத்திற்கும் நல்ல விமர்சனமே வந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவர் கமிட் ஆகியுள்ளார். தற்போது மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தெரியவந்தது. இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் புதிய படத்தில் மணிகண்டன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.