சமூக வலைதளங்களில் நாள்தோறும் வெளியாகும் வனவிலங்கு காணொளிகளில், தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ காண்போரின் உடலை உறைய வைக்கிறது. ‘ஸ்ரீகாந்தா சின்னு’ என்ற ஃபேஸ்புக் கணக்கில் பகிரப்பட்ட இந்த திகிலூட்டும் காணொளியில், வனப்பாதையில் தனது காரில் இருந்து இறங்கிய ஒருவர் மானை நெருங்கி செல்ல முயல்கிறார். அப்போது, திடீரெனப் பாய்ந்து வந்த புலி ஒன்று அவரைத் தாக்கியது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் புலியின் தாக்குதலில் இருந்து சற்று நேரத்திலேயே தப்பிய நிலையில், இந்தச் சம்பவத்தால் பயந்துபோன கார் ஓட்டுநர் வாகனத்தை உடனடியாக பின்னோக்கி எடுத்தார். இருப்பினும், இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகவே பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தக் காணொளி இதுவரை 3 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், பலரும் “புலியைக் கண்டு எங்கே ஓடினார்?” என்றும், “வனத்துறையினர் இந்த மனிதர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.