ருமேனியாவில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேக்கத்தின் பிரபல கால்பந்து கிளப்பான பிஏஓகே அணி, பிரான்சில் நடைபெற உள்ள ஐரோப்பிய லீக் போட்டியில் விளையாட இருந்தது.

இந்தப் போட்டியைக் காண்பதற்காக கிரேக்கத்திலிருந்து பிரான்ஸ் நோக்கி பத்து பேர் ஒரு வேனில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற வாகனம் ருமேனியாவின் திமிஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.

முன்னால் சென்ற ஒரு வாகனத்தை வேன் ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது வேன் பலமாக மோதியது. இந்த மோதலில் வேன் முற்றிலும் சிதறியதுடன், அதில் பயணம் செய்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர்.

படுகாயமடைந்த மற்ற மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதும், அவர்கள் தங்களது அபிமான அணியை உற்சாகப்படுத்தச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்ததும் கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.