உத்திர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள அகேரா கிராமத்தில் பூஜா பால் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரின் தூசி இல்லாத கதிர் அடிக்கும் இயந்திர கண்டுபிடிப்பு சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளது. பூஜாவின் தந்தை புட்டிலால் கூலி தொழிலாளியாக வேலை செய்துவரும் நிலையில் தாய் சுனீலா தேவி அரசு பள்ளியில் சமையல் செய்யும் பணி செய்து வருகிறார்.
பூஜா பால் தனது 5 உடன்பிறப்புகளுடன் ஒரு கூரை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர்களது வீட்டில் மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதி இல்லை. இவர் பசுக்களை பராமரித்தல், தீவனம் வெட்டுதல், வீட்டு வேலைகளை செய்தல் போன்றவற்றை செய்து கொண்டே படிப்பிலும் சிறந்த மாணவியாக திகழ்ந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு, பூஜா 8 ம் வகுப்பு படிக்கும் போது தூசி இல்லாத கதிரடிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் இருந்தது.
ரூ.3000 செலவில் தயாரிக்கப்பட்ட இந்த மாதிரி மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்திய அரசு சர்வதேச அளவில் காண்பிக்க அனுமதித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம், இந்திய அரசாங்கத்தின் சார்பாக ஜப்பானின் கல்வி சுற்றளவிற்காக அனுப்பப்பட்ட பூஜா அங்கு இந்திய அறிவியல் மாணவர்களின் தலையாய பிரதிநிதியாக விளங்கினார்.
இவரின் அறிவாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டிய மாவட்ட நிர்வாகம் அவரது வீட்டிற்கு மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அறிவியலின் ஒளி கீற்றாய் வறுமையில் இருளை வென்ற பூஜா ஒரு சாதாரண சிறுமி அல்ல என்று சமூகத்தில் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்தியாவின் எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் பூஜாவின் பங்கு பெரிதாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது
