திருவனந்தபுரம் அருகே நகரூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில், ரெயில்வே தேர்வாணையம் நடத்திய தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு, திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 2 மாத பச்சிளம் குழந்தை மற்றும் கணவரோடு வந்திருந்தார். தேர்வு எழுதும் நேரத்தில், தாய் மையத்துக்குள் சென்றுவிட்டதால், குழந்தையை தந்தை கவனித்துள்ளார்.
அந்த நேரத்தில் பசியால் 2 மாத குழந்தை தூங்காமல் கதறி அழ தொடங்கியது. அழுகையை சமாளிக்க தந்தை பல வழிகளில் முயன்றாலும், அந்த குழந்தை பசியால் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. தந்தை பரிதவித்து, குழந்தையை சுமந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.
அப்போது பணியில் இருந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர் ஏ. பார்வதி. சம்பவத்தை பார்த்த உடனே, தாமதிக்காமல் தன்னுடைய தாய்மையை முன்னிலைப்படுத்தி, குழந்தையை அழைத்துச் சென்றார். அருகிலிருந்த தனி அறைக்குள் சென்று, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். பசியாறிய பின் குழந்தை அமைதியாக தூங்கியது. இந்த செயலை அங்கு இருந்த அனைவரும் பாராட்டினர்.
பெண் போலீசாரின் மனிதாபிமானம் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்ட சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் போலீஸ் பார்வதியின் செயல் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. “காவலாளி மட்டுமல்ல, தாய்மையும் கொண்ட ஒரு வீராங்கனை” என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
