தேசத்தின் எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியராலும் உயர்வாகப் போற்றப்படுகிறது. அப்படியான ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இரயிலில் பயணித்த ஒரு இந்திய ராணுவ வீரர், கடும் குளிரில் மெல்லிய போர்வையுடன் தரையில் படுத்திருந்தார். அவருக்கு இருக்கை முன்பதிவு கிடைக்காத நிலையிலும், அவர் எந்த புகாரும் இன்றி அமைதியாக உறங்குவதைக் கண்ட அதே பெட்டியில் பயணித்த ஒரு முஸ்லிம் இளைஞர் நெகிழ்ச்சி அடைந்தார்.

அந்த இளைஞர், உறங்கிக் கொண்டிருந்த வீரரை எழுப்பி, “எல்லைகளில் குளிரிலும் மழையிலும் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களுக்கு இது ஒரு சிறிய அர்ப்பணிப்பு” என்று கூறித் தனது இருக்கையை ராணுவ வீரருக்கு வழங்கினார். முதலில் குழப்பத்தில் இருந்த அந்த வீரர், இளைஞரின் அன்பான கோரிக்கையை ஏற்று நன்றி கூறி இருக்கையில் படுத்துக்கொண்டார்.

The soldier’s humble smile and the man’s quiet respect spoke volumes about gratitude and humanity.
byu/cz0n inincredible_indians

இந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பார்த்த இரயில் பயணிகள் அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. குறிப்பாக, இருக்கையைப் பெற்றுக்கொண்ட ராணுவ வீரரின் முகத்தில் தெரிந்த திருப்தியான புன்னகை, பயணிகளின் மனதைத் தொட்டது.

இந்தச் செயலுக்காக அந்த முஸ்லிம் இளைஞரைப் பலரும் பாராட்டி, “இதுதான் நம் நாட்டின் உண்மையான பலம் – ஒற்றுமை, மரியாதை மற்றும் அன்பு” என்று கருத்துத் தெரிவித்தனர். மதம் மற்றும் ஜாதியைக் கடந்து, மனிதநேயம் மற்றும் நாட்டின் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதைச் சுட்டிக்காட்டும் இச்சம்பவம், “இங்கே மதம் அல்ல, மனமே பேசுகிறது; இதுதான் நமது இந்தியா” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.