மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா பகுதியைச் சேர்ந்த 58 வயதான சஞ்சய் விஸ்வகர்மா என்பவர், கடந்த 45 ஆண்டுகளாகத் தனது வாய்க்குள் 150-க்கும் மேற்பட்ட கூர்மையான இரும்பு மற்றும் பித்தளை ஊசிகளை வைத்துக்கொண்டு சுற்றி வரும் வினோத சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தனது 14 வயதில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் கொண்ட இவர், பற்களில் மாட்டிக்கொள்ளும் பாக்குத் துகள்களை எடுக்க ஒருமுறை இரும்பு ஊசியைப் பயன்படுத்தியுள்ளார். அந்த முறையே அவருக்குப் பிடித்துப் போகவே, படிப்படியாக ஊசிகளை வாயிலேயே வைத்துப் பழகிக் கொண்டார்.
தற்போது எந்நேரமும் நூற்றுக்கணக்கான ஊசிகளைத் தனது வாயின் ஒரு பகுதியில் வைத்திருக்கும் இவர், அதனுடனேயே உணவருந்துவது, பேசுவது மற்றும் உறங்குவது எனத் தனது அன்றாடப் பணிகளைச் செய்து வருகிறார்.
ஜபல்பூர் மருத்துவமனையில் சஞ்சய் விஸ்வகர்மாவைச் சோதித்த மருத்துவர்கள், அவரது வாய்க்குள் இத்தனை ஊசிகள் இருந்தபோதிலும் ஒரு சிறு கீறல் கூட இல்லை என்பதைக் கண்டு திகைத்துப் போயுள்ளனர். இது மருத்துவ அறிவியலுக்கே ஒரு புதிராக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒருமுறை விமானப் பயணத்தின் போது பாதுகாப்புச் சோதனையில் சிக்கிக் கொள்வோமோ என்று அஞ்சியதாகவும், ஆனால் எவ்விதத் தடையும் இன்றி வெளியே வந்ததாகவும் அவர் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இவ்வளவு ஊசிகளை வாயில் வைத்திருந்தாலும் அவருக்கு இதுவரை எந்த உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த வினோதப் பழக்கத்தை அவரது குடும்பத்தினர் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளனர்.
