கனடாவில் உள்ள கல்கரி என்ற பகுதியில் “Bow Valley college” ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண் நடைமேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வலிமையான ஆண் ஒருவர் நீல நிற ஜாக்கெட் மற்றும் சாம்பல் நிறத்தில் பேண்ட் அணிந்து இருந்தார். அவர் அந்த இளம் பெண்ணிடம் சென்று பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென அவரை கழுத்தை நெரித்து தாக்கினார். இதனால் அந்த பெண் வலி தாங்க முடியாமல் கத்தினார். இதனை சுற்றி இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணிற்கு உதவ யாரும் முன் வரவில்லை.

அந்த சம்பவத்தை நடைமேடையின் இன்னொரு பக்கத்தில் நின்று கொண்டு ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அதனை இணையத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில் தாக்கப்படும் மாணவி இந்தியாவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அதோடு அந்த நபர் யார்? அவர் ஏன் அந்த மாணவியை தாக்கினார்? என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.  மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.