கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவருக்கு, சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத், முகமது பாலேகுண்ட்ரி ஆகிய மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர்.

தங்களைப் பத்திரிகையாளர்கள் என்றும், யூடியூப் சேனல் நடத்துபவர்கள் என்றும் கூறி அந்தப் பெண் அதிகாரியுடன் நட்பு பாராட்டியுள்ளனர். அந்தப் பெண்ணும் இவர்களை முழுமையாக நம்பியுள்ளார்.

பெண் அதிகாரி வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்த கும்பல், நைஸாக வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறை மற்றும் பாத்ரூம் பல்புகளுக்குள் ரகசியக் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு, ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அந்தப் பெண் அதிகாரியின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

“இந்த வீடியோக்கள் வெளியே தெரியக்கூடாது என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும்” என மிரட்டியுள்ளனர். பிறகு அது 50 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய பதவியில் இருக்கும் அந்தப் பெண் அதிகாரி இதனால் பெரும் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளானார். இறுதியில் துணிச்சலாகப் புகார் அளித்த பெண் அதிகாரியின் வழக்கை சிபிஐ சிறப்புப் படை கையில் எடுத்தது.

காவல்துறையினர் ஒரு ‘மாஸ்டர் பிளான்’ போட்டனர். பணம் தருவதாகக் கூறி அந்த கும்பலைப் பெண் அதிகாரி மூலம் வரவழைத்தனர். 50 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 8 மெமரி கார்டுகள், பென் டிரைவ், ரகசிய கேமராக்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.