புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி பல ரெஸ்டோ பார்கள் இயங்கி வந்துள்ளன. அதில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மோஷிக் சண்முகப்ரியன் (22) என்ற இளைஞர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வந்துள்ளார்.
அவர் தனது கல்லூரி நண்பர்களுடன் ஷாஜன் என்ற நண்பருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். சுமார் 18க்கும் மேற்பட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி புதுச்சேரிக்கு பிறந்தநாளை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மிஷன் வீதியில் உள்ள ஓஎம்ஜி ரெஸ்டோ பாருக்கு சென்று பிறந்த நாளை கொண்டாடினர். விடிய விடிய குடித்து மது போதையில் இருந்த இளைஞர்களை பாரின் பவுன்சர்கள் வெளியேறும்படி கூறியுள்ளனர்.
அதனால் இளைஞர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரமடைந்த பவுன்சர் ஒருவர் மோஷிக் சண்முகபிரியனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சண்முகப்ரியன் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் இந்த கலவரத்தில் ஷாஜனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த பெரிய கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட 11 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து ரெஸ்டோ பார் ஊழியர் வில்லியனூரை சேர்ந்த அசோக்ராஜ்(22), பார் உரிமையாளர் ராஜ்குமார்(34), கேஷியர் முந்தியால் பேட்டை சஞ்சய் குமார், ஊழியர்கள் பூபதி, கடலூரை சேர்ந்த அரவிந்த், விழுப்புரத்தை சேர்ந்த புகழேந்தி ஆகிய 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் ரகசிய முறையில் விசாரணை நடத்தப்பட்டது .பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை அடுத்து அனைவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோபார்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்ததோடு அவர்களின் உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இச்சம்பத்தால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
