ஒடிசாவின் போலங்கிர் மாவட்டம் டிட்லாகரில் மனதை பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 வயது சிறுவன் தனது 6 வயது தம்பியை கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். தம்பி பிறந்த பிறகு பெற்றோரின் அன்பு தமக்குக் குறைந்துவிட்டதாக எண்ணிய மூத்த சகோதரன், பொறாமையும், கோபமும் காரணமாக கொடூர முடிவெடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூன் 28 அன்று தாய், தன் மகன் நாராயண் காணாமல் போனதாக புகார் அளித்ததிலிருந்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.
தம்பி மீது பொறாமை… சண்டையிலேயே கொலை
போலீசார் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பூபேஷ், தம்பியை விரும்பாததாகவும், வீட்டில் அடிக்கடி தகராறுகள் நடப்பதாகவும் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதில் கோபம் தணியாமல், சமையலறையில் இருந்த சுமார் 6 அங்குல நீளமுள்ள கத்தியால் தம்பியின் கழுத்தில் குத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கொலைக்குப் பிறகு, முதலில் உடலை வீட்டின் பின்னால் புதைத்ததாகவும் கூறினார்.
உடலை இரவில் மீண்டும் தோண்டி புதைத்த கொடூரம்
பூபேஷ், குடும்பத்தினர் தூங்கிய பிறகு இரவு 1 மணியளவில், தாயின் புடவையின் உதவியுடன் உடலை வீட்டுப் பின்புறத்திலிருந்து தோண்டி எடுத்தார். பின்னர், சுமார் 300–400 மீட்டர் தொலைவில் உள்ள வேறு இடத்தில் உடலை புதைத்தார். தாயின் சந்தேகத்தின் பேரில், மூத்த மகனை போலீசார் விசாரிக்க, இந்த கொடூரம் அம்பலமானது.
போலீசார் மீட்பு… நீதிமன்றில் ஆஜர்
பலங்கிர் எஸ்பி தெரிவித்ததாவது, “மருத்துவ குழு, மாஜிஸ்திரேட், அறிவியல் நிபுணர்கள் முன்னிலையில் குற்றம் நடந்த இடத்தை மீண்டும் தோண்டினோம். குற்றத்தில் பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தையும், உடலை புதைக்க பயன்படுத்திய புடவையையும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்படைத்தார். புதைக்கப்பட்ட உடலை நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுத்து, பஞ்சநாமா செய்தோம். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தினோம்” என்றார். இந்த வழக்கு தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
