
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை அடிவார பகுதியில் குவிந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு வனத்துறையின் கேட் திறக்கப்பட்டது. அதன் பின் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதோடு தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் மலைக்கு எடுத்துச் செல்ல கூடாது என்றும் வலியுறுத்தினர்.
அதோடு மலைக்குச் செல்லும் பக்தர்களை வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே அவர்களை அனுமதித்தனர். இந்நிலையில் மதுரை காந்தி நகரில் வசிக்கும் குமரவேல் (45) என்பவர் பேரையூர் வழியாக மலை ஏறி சதுரகிரிக்கு சென்றார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மலையிலிருந்து கீழே கொண்டுவந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.