மகாராஷ்டிரா மாநிலம், நானந்த் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் (20) மற்றும் அன்சல் என்ற இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களின் காதலைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பையும் மீறி சக்ஷமைத் திருமணம் செய்துகொள்ள அன்சல் முடிவெடுத்ததை அறிந்த அவரது தந்தையும் சகோதரர்களும், வியாழக்கிழமையன்று சக்ஷமைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர். இது ஆணவக்கொலை எனப் பார்க்கப்படுகிறது.
சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அவரது வீட்டிற்குச் சென்ற அன்சல், யாரும் எதிர்பாராத விதமாகச் சடலத்திற்குக் குங்குமம் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு இறந்த தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். அப்போது, “சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர்” என்று கூறிய அன்சல், தனது குடும்பத்தினருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சக்ஷமின் வீட்டிலேயே மருமகளாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் சபதம் எடுத்தார். இந்தக் கொலை வழக்கில் அன்சலின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
