கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி அருகே உள்ள சோமனஹள்ளி கிராமத்தில் நடந்த ஒரு துயர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. ராகவேந்திரா கேசவ் ஹெக்டே என்பவரின் பண்ணை தோட்டத்தில் வேலை செய்துவரும் திப்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது 9 மற்றும் 7 வயது மகன்களுடன் அங்கு தங்கி வந்தனர். குரங்குகள் தொந்தரவு அதிகமாக இருந்ததால், ராகவேந்திரா தனது தோட்டத்தில் உள்ள அறையில் நாட்டுத் துப்பாக்கிகளை பாதுகாப்பாக வைத்திருந்தார்.

நேற்று காலை, தோட்டத்தில் மற்றொரு தொழிலாளி துப்பாக்கிகளை வைத்திருந்த அறையைத் திறந்து, அதில் ஒரு துப்பாக்கியில் குண்டுகளை ஏற்றி வைத்திருந்தார். அப்போது அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த தம்பதியின் இரு பிள்ளைகள், அந்த துப்பாக்கியை எடுத்து விளையாடினர். தற்செயலாக 7 வயது சிறுவன், துப்பாக்கியால் தனது அண்ணனை சுட, அந்த குண்டு 9 வயது சிறுவனின் வயிற்றில் பாய்ந்தது.  இதனால் படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் பெற்ற சிர்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உரிய பாதுகாப்பின்றி துப்பாக்கிகளை வைத்திருந்த தோட்ட உரிமையாளர் ராகவேந்திரா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை உயிரிழந்த இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.