கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பு பள்ளியில், ஆகஸ்ட் 27, 2025 அன்று 9-ம் வகுப்பு பயிலும் 17வயது மாணவி ஒருவர், பள்ளியின் கழிவறையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 2 மணியளவில், மாணவி பிரசவ வலியில் தவிப்பதைப் பார்த்த சக மாணவிகள், பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக மாணவியும், பிறந்த குழந்தையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர்-ன்படி, 9-10 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் இந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இதுவரை அவர் யாரைப் பற்றியும் பேச மறுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவியின் சகோதரர் கோரிக்கையால், பள்ளி நிர்வாகம் இந்த சம்பவத்தை உடனடியாக பதிவு செய்யவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஹர்ஷல் போயர், காவல் கண்காணிப்பாளர் பிருத்விக் ஷங்கர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லவிஷ் ஓர்டியா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். பள்ளி நிர்வாகத்தின் பணி தவறுதல் மற்றும் மாணவியின் கல்வி, உடல்நல கண்காணிப்பில் அலட்சியம் இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவன சங்கம் (KREIS), பள்ளியின் முதல்வர் பசம்மா, விடுதி காப்பாளர் கீதா, அறிவியல் ஆசிரியர் நரசிம்மமூர்த்தி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து, துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவி மாதத்திற்கு சராசரியாக 10 நாட்கள் மட்டுமே வகுப்பிற்கு வந்ததாகவும், வழக்கமான உடல்நல பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், செவிலியர் மாணவியின் கர்ப்ப அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (KSCPCR) கடும் கண்டனம் தெரிவித்து, சுயமாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், புகாரின்படி, பாதிக்கப்பட்டவர் மீது பாலியல் வன்கொடுமை புரிந்தவர் உட்பட, விடுதி காப்பாளர் கீதா, செவிலியர் காவேரம்மா, முதல்வர் பசம்மா மற்றும் ஷரணபாசவா ஆகியோர் மீது POCSO சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் பிரிவு 64 மற்றும் குழந்தைகள் நீதி சட்டம் 2025-ன் பிரிவுகள் 33, 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
