அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தைச் சேர்ந்த அபே கிங்ராஸ் (Abbey Gingras) என்ற பெண், தனது 112 ஆண்டு கால பழமையான வீட்டைப் புதுப்பிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான பொக்கிஷத்தைக் கண்டெடுத்துள்ளார்.

1913-ல் கட்டப்பட்ட அந்த வீட்டின் கதவுப் பிடிகள் (Door Handles) மற்றும் பிளேட்டுகளில் பல அடுக்கு பெயிண்டுகள் பூசப்பட்டிருந்தன. அதனைச் சுத்தம் செய்ய அவற்றைக் கழற்றிய போது, ஒரு பிளேட்டிற்குள் ஒரு மோதிரம் சிக்கியிருப்பதை அவர் கண்டார். 1920 அல்லது 30-களில் யாராவது விளையாட்டாகவோ அல்லது பாதுகாப்பாகவோ அங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என அவர் கருதுகிறார்.

அந்த மோதிரம் தங்கமாக இருக்கலாம் என்றும், அதில் பதிக்கப்பட்டிருப்பது மாணிக்கக் கல்லாக இருக்கலாம் என்றும் கிங்ராஸ் முதலில் நினைத்தார். ஆனால், நகைக்கடைக்காரரிடம் பரிசோதித்த போது அது உண்மையான தங்கம் இல்லை என்பதும், கற்கள் சாதாரணமானவை என்பதும் தெரியவந்தது.

இருப்பினும், அந்த மோதிரம் பல தசாப்தங்களாகத் தனது வீட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், அதற்கு மிகுந்த உணர்வுப்பூர்வமான மதிப்பு இருப்பதாக அவர் நெகிழ்ந்துள்ளார்.

எனவே, அதனை விற்காமல் அவ்வப்போது அணிந்து கொள்வதாகவும், தனது வீட்டின் மறுசீரமைப்புப் பயணத்தை நினைவூட்டும் ஒரு பொக்கிஷமாக அதனைப் பாதுகாத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.