தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் படிக்கின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து மகளிர் பேருந்துகளில் மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் தென்காசியில் இருந்து வரும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது கூட்டம் காரணமாக கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று காலை கல்லூரி செல்வதற்காக மாணவிகள் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வராததால் தேர்வு எழுத தயாராக இருந்த மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் திடீரென மாணவிகள் ஆலங்குளம் பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நேரத்திற்கு இயக்கப்பட்ட கட்டணமில்லா பேருந்துகளை தினமும் இயக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது தொடர்பாக கூடிய விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் பிறகு மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.