மகாராஷ்டிர மாநிலத்தில் 75 வயதுமிக்க முதிய பெண்மணி ஒருவர், இருள் சூழ்ந்த ஆழமான பாழடைந்த கிணற்றுக்குள் தற்செயலாகத் தவறி விழுந்து, இரு தினங்களாக உயிருக்குச் போராடிய சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
யாருடைய உதவியும் இன்றி, உணவு மற்றும் குடிநீரின்றி அந்தப் பாழும் கிணற்றுக்குள் இரண்டு நாட்கள் வாழ்க்கையின் விளிம்பில் நின்று அவர் நடத்திய மரண போராட்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாகும். மேலும், அந்த இருண்ட கிணற்றுக்குள் விஷப்பாம்புகள் மற்றும் நண்டுகள் உலவிக்கொண்டிருந்த மிக ஆபத்தான சூழலிலும், அந்தப் மூதாட்டி காட்டிய மனதிடமும் தைரியமும் அனைவரையும் உறைந்துபோகச் செய்துள்ளது.
இரண்டு நாட்களாகக் காணாமல் போன மூதாட்டியைத் தேடி அலைந்த உறவினர்களும் கிராமமக்களும், பாழும் கிணற்றிலிருந்து மெல்லிய குரல் கேட்பதைக் கண்டு திடுக்கிட்டு உள்ளே எட்டிப் பார்த்துள்ளனர். அங்கே பாம்புகளுக்கும் நண்டுகளுக்கும் நடுவே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாட்டியைக் கண்டு பதறிப்போன மக்கள், உடனடியாகக் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு இடையே தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி, இரண்டு நாட்களாக நரக வேதனையை அனுபவித்த அந்த முதியவரைப் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
75 வயதில் விஷப்பாம்புகள் மற்றும் ஆபத்தான ஜந்துக்கள் நிறைந்த இருண்ட கிணற்றில் இரண்டு நாட்கள் கழித்தும், எந்தவித ஆபத்துமின்றி அந்தப் பாட்டி உயிரோடு மீட்கப்பட்டது ஒரு மாபெரும் அற்புதமாகவே பார்க்கப்படுகிறது. மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெகிழ வைத்த அற்புதம் உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட நம்பிக்கை இழக்காமல் போராடி உயிர் பிழைத்த அந்தப் பாட்டியின் வீரம் மற்றும் மனவலிமை பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி, மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
