சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட் பேசிய பேச்சு, தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் புயலையும் புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது. தவெக – காங்கிரஸ் இடையே பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளும் அதிருப்திகளும் நிலவி வரும் சூழலில், பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தாரகை கத்பர்ட் உருக்கமாகப் பேசியது, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் சாய்கிறதோ என்ற வலுவான கேள்வியை அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.
தன் பேச்சில், “அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனை எனது தொகுதிக்கு அனுப்பி என்னை வெற்றி பெறச் செய்தார்” என்று பழைய பாசத்தையும் நினைவுகூர்ந்த தாரகை கத்பர்ட், பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்குள் வந்துவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் திமுகவுடன் இணைந்து செயல்பட்டோம்; அதே நோக்கத்துடன்தான் தவெகவுடனும் கூட்டணி அமைத்தோம் என்று தெளிவுபடுத்தினார். மேலும், “எங்களை பார்த்து முதுகில் குத்திவிட்டீர்கள் என்று இனியும் திமுகவினர் கூற வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டது, கூட்டணி மாறினாலும் திமுக மீதான காங்கிரஸின் மெல்லிய ஆதரவுப் போக்கையே காட்டுகிறது.
பிரதமர் வேட்பாளர் பிரச்சனையால் தவெக அரசுக்குக் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தாரகை கத்பர்ட்டின் இந்த திமுக ஆதரவு தொனியிலான பேச்சு தவெக தலைமைக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் கூடுதல் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தவெக உடனான உறவில் விரிசல் அதிகமடைந்து வரும் வேளையில், காங்கிரஸின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் தவெக கூட்டணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
