தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, சமயபுரம், உளுந்தூர்பேட்டை உட்பட 26-க்கும் மேற்பட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) இந்த அதிரடி முடிவால் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ₹10 வரையிலும், பஸ் மற்றும் லாரிகளுக்கு ₹50 வரையிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல், பல அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு அதிகபட்சமாக ₹100 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த திடீர் சுங்கக்கட்டண உயர்வின் காரணமாக, சரக்கு போக்குவரத்துச் செலவு கணிசமாக அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு உயர்ந்து, சில்லறை விற்பனையிலும் அவற்றின் விலைகள் மெல்ல மெல்ல அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகளும், லாரி உரிமையாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் சாமானிய மக்களுக்கு, இந்த கட்டண உயர்வு கூடுதல் நிதிப் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

​ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வரும் சுங்கக்கட்டண வசூலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். பல சுங்கச்சாவடிகளின் காலக்கெடு முடிந்த பிறகும் தொடர்ச்சியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.