ரயிலில் திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை சைரன் சத்தத்தால் பயணிகள் பீதியடைந்து அவசரமாக வெளியேற முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக்காலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, உரத்த குரலில் அவசரகால எச்சரிக்கை ஒலித்தது. தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை சக பயணிகள் “ரயிலில் தீப்பிடித்துவிட்டது” என்று கூறி எழுப்பியதால், பெட்டிக்குள் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பெட்டியைச் சென்று ஆய்வு செய்தனர். அப்போதே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்த உண்மையான காரணம் தெரியவந்தது.
ரயிலின் மின் விநியோகப் பெட்டிக்குள் நுழைந்த எலி ஒன்று மின் கம்பிகளைக் கடித்ததால் தீப்பொறி ஏற்பட்டு அந்த எலி உயிரிழந்துள்ளது. அதனால் வந்த லேசான புகையை உணர்ந்து, தானியங்கி தீ எச்சரிக்கை கருவி செயல்பட்டுச் சைரன் ஒலித்துள்ளது.
பெட்டியில் பெரிய அளவில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த ஊழியர்கள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து பயணிகளை அமைதிப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை.
